வேள்பாரி
#Velpari
வேள்பாரி… ஆகச்சிறந்த படைப்பு❣️
வேள்பாரியை வாசித்த பொழுது மூவேந்தர் எனும் மாயபிம்பம் உண்மையில் ஆட்டம் கண்டு தான் விட்டது.
வேள்பாரியானது சங்க இலக்கிய பாடல்களில் இருந்து திரட்டப்பட்ட தரவுகளை கொண்டு பின்னப்பட்ட ஒரு புனைவுக்கதை. கதையில் எழுத்துநடை, கதைக்கரு, காட்சி அமைப்பு, வசனங்கள், கதாபாத்திரங்களின் வடிவமைப்பு, வருணனைகள் மற்றும் அரியபெரும் தகவல்கள் என அனைத்துமே அபாரம்.
தொடக்கத்திலிருந்து முடிவு வரை நாம் பறம்பு மலையை சுற்றிப்பார்க்க, உணர, விரும்ப நம்மை வழிநடத்திச் செல்கிறார் பாரியின் உற்ற நண்பரான தமிழ்ப் பெரும்புலவர் கபிலர்.
ஐவகை நிலங்களுள் ஒன்றான குறிஞ்சி நிலத்தைச் சுற்றியே மொத்தக்கதையும் நகர்கிறது.
எனக்கு ஒரு சமயம் பயம் வந்துவிட்டது. காரணம், வெளியாட்கள் நுழைய முடியா பறம்பில் நாம் பாரியை பின்தொடர்ந்து அவனது நட்பை, கொடை உள்ளத்தை, அறம் காத்தலை, அரவணைக்கும் தாயுள்ளத்தை, காதலை, கூடலை, வீரத்தை, மதி நுட்பத்தை, தாவர விலங்கினங்கள் பற்றிய அறிவை மற்றும் பறம்பின் ரகசியங்களை என எல்லாம் அருகில் நின்று கண்டு கொண்டிருக்கிறோமே, ஒருவேளை அவனது கோபம் நம்மீது திரும்பி விட்டால் என்ன செய்வது என்று தான்.
என்ன சொல்ல?! அனைத்து காட்சிகளும் தத்ரூபமாக கண்முன் ஓடிக்கொண்டிருந்தது. அதற்கு இடையிடையே காணப்பட்ட ஓவியங்களும் அடித்தளமமைத்து கொடுத்தன என்று சொன்னால் மிகையாகாது.
மலைக்கடவுளான முருகன்-வள்ளியின் காதல் காட்சிகள் எல்லாம் உண்மைக்கும் கற்பனைக்கும் இடைப்பட்ட பள்ளத்தில் நம்மை தள்ளுகின்றன. ஒவ்வொரு பருவத்திற்கும் பரணமைத்து வள்ளிக்கு வெவ்வேறு மலர்களை சூட்டிய முருகன் அவளோடு நம்மையும் மயங்கச்செய்கிறான்.
கார்த்திகை(கார்காலம்+வேனிற்காலம்(தீ)), சோமப்பூண்டில் உருவாகும் சோமபானம், கரும்பு, கட்டில் என ஒவ்வொன்றிற்கும் காரணப்பெயர்களை கூறியிருந்ததெல்லாம் ரொம்ப சுவாரசியமாக இருந்தது.
நம் அனைவருக்கும் பாரி என்றாலே "அவன் துவண்டு கிடந்த முல்லைக் கொடிக்கு தேர் கொடுத்தான்" என்பது தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் அதனைக்குறித்து பாரியிடம் கபிலர் "அது உண்மையா பாரி?" என்று கேட்டபொழுது பாரி அதை நினைவு கூர்ந்து 'ஆம்' என்றும், தேக்கன், 'இதில் வியக்க என்ன இருக்கிறது?' என்றும் கேட்டபொழுது எனக்கு கன்னத்தில் அடிவாங்கியது போல் இருந்தது. நாம் அனைவரும் தலையில் தூக்கிவைத்து கொண்டாடும் ஒரு விஷயத்தை பாரியும் பறம்பு மக்களும் 'இது மனித இயல்பு தானே' என்கின்றனர். ஆனாலும் இனி யாராவது முல்லைக்கு தேர்கொடுத்தான் பாரி என்று கூறினால் எனக்கு அதற்கு முந்தைய நாள் இரவுதான் ஞாபகத்திற்கு வரும். அய்யயோ தப்பா நினைக்காதீங்க.. நான் வெண்சாரையைப் பற்றி சொன்னேன். அதனைப் பார்ப்பவர்கள் மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்வார்கள் அல்லவா. அந்நிகழ்வு உண்மையோ பொய்யோ, ஆனால், அந்நிகழ்வு தான் பாரியை மரணம் நெருங்கியிருக்காது, அவனாகத்தான் மரணத்தை நெருங்கியிருப்பான் என்று இன்னும் என்னை ஆழமாய் நம்பச் செய்கிறது.
மலை… அரிய பெரும் அதிசயங்களையும் ஆச்சரியங்களையும் தன்னுள் சேர்த்து வைத்திருக்கும் ஒரு பொக்கிஷம்.
எத்தனை வகையான நாவல்பழங்கள், சர்ப்பங்கள், மதங்கள்...!
*தீப்புல்(நீர் பட்டு அடங்கியவுடன் ஒளியை உமிழக்கூடியது)
*வெண்சாரை(உடலே ஒளியை உமிழக்கூடிய அதிசய அரவம்)
*கருநொச்சி (தனக்கு அடியில் கண்டிப்பாக புதையலை கொண்டிருப்பது)
*கருநெல்லி (இதனை சாப்பிட்டுவிட்டு பார்த்தால் பகலிலும் விண்மீன் தெரியும்)
* ஆட்கொல்லிமரம்(இம்மரத்தின் அருகில் நெருங்கினாலே மரணம் உறுதி) *கொல்லிக்காட்டு விதை( பறவையையும் மீனையும் மயங்கச்செய்யும்)
*பால்கொறண்டி(காய்ந்த சருகை விடவும் பச்சையான பால்கொறண்டி படபடவென்று பற்றி எரியும்)
* நிலமொரண்டி(வேரிலேயே பூப்பூக்கும் மலர்.. காதலர்கள் இணைந்து காற்றை ஊத ஊத ஆண்டுகள் பல கடந்தும் மலரும் மலர் இது)
*சாமப்பூ(ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் பூ)
இன்னும் சொல்ல எவ்வளவோ அற்புதங்கள்.
இவற்றை எல்லாம் அறியும்போது கொஞ்ச நாட்களுக்கு முன்பு பற்றி எரிந்த அமேசான் காடு தான் காட்சி நிரலாக வந்துபோனது. எவ்வளவு பெரிய இழப்பு அது.
ஆழி எனும் விலங்கினத்தை பற்றி கூறும் போது பாரி சொல்வான், "ஒரு விதையைக் கூட ஊன்றாதவன் மரத்தின் ஒரு கிளையை கூட முறிக்க தகுதி இல்லாதவன்" என்று. பாருங்களேன் "இயற்கையை அழிப்பவரை இயற்கை அழிக்கும்" என்னும் வார்த்தைகள் தான் எத்துனை அர்த்தங்கள் பொதிந்தவை.
என்னே! மலை மக்களின் மருத்துவ அறிவு. மனிதனின் தற்காப்பு உத்திகள் எல்லாம் உண்மையில் வியக்க வைக்கின்றனவாக இருக்கின்றன.
❤️இணைசேருதல் உயிரினப் பொதுமை❤️
"காதல் தேடலில் தொடங்கி தொலைவதில் முடியும்" … அட! வாசிக்கும் நம்மையுமா தொலையச்செய்யும்?
*முருகன்-வள்ளி
*பாரி- ஆதினி
*மயிலா- நீலன்
*அங்கவை-உதிரன்
*சூலிவேள்- தூதுவை
*கோவன்-செம்பா
*பொற்சுவை- பெயர் சொல்லப்படாத காதலன்
இவர்கள் அனைவருமே நம்மால் கடக்க முடியா காதலர்கள்.
குலம்.. தொழில் மாறலாம், இருப்பிடம் மாறலாம், ஆனால் வழி வழியாய் மரபணுக்கள் மூலம் கடத்தப்படும் திறமைகள், தனித்துவங்கள் மாறாது. மாற்றவும் முடியாது. இதற்கு உதாரணம் அலவன் தான். எனக்கு அவனது நீலவளையம் பூக்கும் கண்ணும், இவன் மனித உருக்கொண்ட அரவமா என நம்மை எண்ண வைக்கும் தனித்தன்மையும் மிகவும் பிடித்தது. பச்சிலையின் கசப்பு மீறி பேசி தேக்கனையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியவன் அல்லவா அவன்.
வேந்தர்கள் பறம்பு மக்களை காட்டுமனிதர்கள், மூர்க்கர்கள் எனும் போதெல்லாம் எனக்கு பொற்சுவையின் ஞாபகம் தான் வந்தது. அவளின் இறப்பு என் கண்களில் நீரை பெருக்கியது. மணமாகப்போகும் பெண்ணின் விருப்பத்தை அறியாமல் அவளை புதைகுழியில் தள்ளியது தான் வளர்ச்சியடைந்த ஓர் இனத்தின் நாகரீகமா? இல்லை அச்செயல் தான் மூர்க்கத்தனம். தன் மகள் வேறு குல ஆணை விரும்புகிறாள் என தெரிந்ததுமே என் பேரப்பிள்ளையின் கண்களில் நீல வளையம் பூத்து அடங்குவதை காண ஆவலோடு காத்திருக்கிறேன் என்றானே பாரி, அவனின் அவ்வார்த்தைகளே வளர்ச்சியடைந்த ஒரு சமூகத்தின் அடையாளம். நான் மனிதன் தான் என்பதற்கு அடையாளம். மலைமக்களில் ஒருவளான மயிலாவிற்கு தனக்கேற்ற மணமகனை தேர்ந்தெடுப்பதில் உள்ள சுதந்திரமும் உரிமையும் மாடமாளிகைகளில் தவழ்ந்து புரண்ட பொற்சுவைக்கு இல்லாமல் போனதே என நினைக்கும் போது வருத்தமாக இருந்தது.
தான் தன் மனம் விரும்பா கணவனால் பெண்டாளப்பட்ட பின்பு தன் தோழி சுகமதியிடம் "நான் வேட்டையாடப்பட்டேன். ஆனால் என்னுடையவை எல்லாம் என்னிடம் தான் இருக்கின்றன. இதோப்பார் என் சிரிப்பு கூட என்னிடம் தான் இருக்கிறது சுகமதி" என்று பொற்சுவை கூறும்போது, அவைதான் எவ்வளவு மனவலிமை நிறைந்த சொற்கள் என்று தோன்றியது.
அத்தி மதுவுக்கும் அறுபதாங்கோழிக்கும் இவ்வுலகில் ஈடுகிடையாது என அதனை கபிலருக்கு கொடுக்க பாரி அலையோ அலையென்று அலைந்தது, பார்த்த முதல் நாளிலேயே தான் ஒரு தலைவனாக இருந்தாலும் அவரை வணங்கி தன் தோளில் சுமந்து சென்றதெல்லாம் கல்விக்கும் தமிழ்புலமைக்கும் பாரி செலுத்திய மரியாதையையும், கபிலர் மீது பாரி கொண்டுள்ள நெஞ்சளவு நேசத்தையுமே காண்பித்தது. கபிலர் மட்டும் சளைத்தவரா என்ன? பாரியை வீழ்க்கத் தானே சொல் கொடுத்துவிடக்கூடாதென்று அஞ்சி பறம்பை விட்டு அகலாமல் கிடந்தவரை மறக்க முடியுமா? இருப்பினும் சில வார்த்தைகளை விட்டு விட்டார்.
கொற்றவை கூத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குலமும் தங்கள் குலம் பற்றி நினைவு கூர்ந்து சபதம் எடுத்தது எல்லாம் ஆறா வடுக்களின் அடையாளங்களாகவே தோன்றின எனக்கு.
"எல்லா குலங்களையும் அழியவிடாமல் நம் மண்ணில் பாதுகாத்து வந்த நாம், நம் குலத்தையே அழிக்க துணிந்து விட்டோமே" என்று காலம்பனை தாக்கியதால் பாரி கதறும் போது அவனையும் நம்மையும் தேற்றுவார் யாருமில்லை.
கட்டியங்காட்டு போரில் கொடுத்த வாக்கை காப்பாற்ற தன் யானைப்படையையே கீழிறக்காமல் விட்டவனை கடைசியில் காற்றும் காற்றியும் கைவிடவில்லை என்பது கவனிக்கவேண்டிய ஒன்று.
சரி பாரியால் எப்படி பெரும்படையை வெற்றி கொள்ள முடிந்தது?? முக்கியமான பத்து மதிப்பெண் கேள்வி இது. பதில் அவன் தன் பலத்தை அறிந்தான், மரங்களை அறிந்தான், செடி கொடிகளை அறிந்தான், நிலத்தை அறிந்தான், காற்றை அறிந்தான் என்பதே. எண்ணிக்கையின் வலிமையை விட நுட்பங்களின் ஆற்றல் வலிமையே முதன்மையானது என்பதை உணர்ந்ததால் தான் பாரியால் வாகைசூட முடிந்தது.
போர்க்களத்தில் குதிரைகளுக்கு அந்த புற்று மணலில் நடக்க தகுந்த லாடங்களை அடித்ததாகட்டும், வீரர்களின் தாகம் போக்க அவர்களின் கழுத்தில் மூலிகையை கட்டியதாகட்டும், எதிரியின் குதிரையை மயங்கச்செய்ய மூலிகை அம்புகளை பயன்படுத்தியதாகட்டும், இறுதியில் பூச்சிகளை ஏவியதாகட்டும் எல்லாமுமே அறிவு மற்றும் நுட்பத்தின் வெளிப்பாடே. ஆனால் இறுதியில் பாரி மூன்று யானைகளை கொண்டு வேந்தர்களின் முந்நூறு யானைகளை வென்றான் என்பதுதான் கற்பனைக்கு அப்பாற்பட்டதாக தோன்றியது.
கொல்லிகாட்டு விதை( சேரன்) , தேவவாக்கு விலங்கு( பாண்டியன்), பறம்பு புதையல்( சோழன்), மூவேந்தரும் தன் பெண்களை மணமுடிக்க கேட்டு போது பாரி மறுத்தது… என இவையெல்லாம் மூவேந்தர், பாரியை நோக்கி போர் தொடுத்ததற்கான துணைக்காரணங்களாய் இருப்பினும் அவர்கள் அனைவருக்கும் முழுமுதற் காரணமாய் விளங்கியது கொடிகட்டிப் பறந்த பாரியின் புகழ் தான். அய்யோ பாவம், வரலாற்றில் கடைசி வரை அவர்களால் பாரியைத்தான் அழிக்கமுடிந்ததே தவிர அவனது புகழை அழிக்க முடியவில்லை. அதுவும் பாணர்கள் போல் வேஷமிட்டு தான் கொல்லமுடிந்ததே தவிர எதிர்கொண்டு நிற்க முடியவில்லை. இதைவிட ஒருவீரனை அவர்களால் புகழ் பெற செய்துவிட முடியுமா என்ன?
இரதவாதன், வேட்டூர் பழையன், தேக்கன் என ஒவ்வொருவரின் கதாபாத்திரமும் மனம் விட்டு அகலாதவை.
கருங்கைவாணன்.. பண்டியப்படையின் தளபதி. சிறப்பாக தன் படையை வழிநடத்தினார். மூவேந்தர் பக்கம் இறுதிவரை களத்தில் எனக்கு வீரனாய் காட்சியளித்தது இவர்மட்டுமே. ஆனால் விதிமுறையை மீறி நஞ்சை உபயோகப்படுத்த வேண்டும் என்றவர் வற்புறுத்தியது மட்டும் தான் இவர்மீதும் கோபங்கொள்ளச் செய்தது.
பொதிய வெற்பன், மையூர் கிழார், குலசேகர பாண்டியன், சோழவேழன், செங்கனச்சோழன் போன்றோர்கள் எல்லாருமே ஒவ்வொரு வகையில் நம் சினத்திற்கு தீனி போடும் கதாபாத்திரங்கள்.
நிலைமான் கோல்சொல்லியாய் இறுதிவரை அறம் காத்து நின்ற திசைவேழாரை நினைவு கூறவில்லையானால் அதைவிட பெரும்பிழை வேறில்லை. அவரைப்பற்றிக் கூறும்போது ஓரிடத்தில் "விடையின்றி தலைதாழ்த்தி நிற்கும் மாணவனே ஆசானின் அகங்காரத்துக்குச் சுவையூட்டுகிறான்" என்றிருப்பார் எழுத்தாளர். மூவேந்தரானாலும், தம் தரப்பினராயினும் குற்றத்தை எடுத்துரைத்து, தண்டனை சொல்லி, தன் வாதம் மறுக்கப்படும் போது அறமில்லாதவற்காகவா நான் கோல்சொல்லியானேன் என தன்னுயிரை மாய்த்துக்கொண்டவரை இனி வரலாறு என்றும் நினைவு கூறும்.
பாரி, மலையை விட்டு கீழிறங்கும் வரை அவன் கீழிறங்கினால் என்னாகுமோ என்ற எதிர்பார்ப்பானது நொடிக்கு நொடி அதிகரித்து கொண்டே இருந்தது. ஆனால் அவன் கீழிறங்கிய பின்பு நடந்த நிகழ்வுகள் யாவும் ஏதோ அவசரக்கதியில் மிகவிரைவிலேயே நடந்து முடிந்தது போலவே தோன்றியது. அதேபோல் பாரி கீழிறங்கிய அன்று மழை பெய்தபோது அவ்வளவு பெரிய வேந்தர் படையில் யாருமே எண்ணற்ற ஈட்டிகளை எறிந்து சென்றவர்களை கவனிக்காமல் தாக்காமல் இருந்தார்களா? என்பதும் முரணாக தோன்றியது.
இறுதியில் நடந்த கொற்றவை கூத்திற்குப்பின் நடந்த நிகழ்வுகளை எல்லாம் கூறியிருந்தால் நிச்சயம் அவ்வள்ளலின் முடிவை நம்மால் தாங்கிக்கொள்ள முடியாமல் போயிருந்திருக்கும். வெற்றியின் களிப்பிலேயே இப்படைப்பு நிறைவு பெற்றிருந்தது மனநிறைவை கொடுத்தது❣️
வேள்பாரி முழுக்க முழுக்க நமக்கு சொல்வது, "மனங்களை வெல்லத் தெரிந்தவன் ஒருபோதும் தோல்வியடைய மாட்டான்" என்பதைத்தான்.
வேள்பாரியின் புகழ் எங்கும் ஓங்குக!!!
Rasanai mikkavar nigal ❤️💕❤️💕
ReplyDelete